இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச விமானப் பயணிகளுக்கான டிஜி யாத்ரா சோதனைத் திட்டம் நாட்டின் 7 முக்கிய விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026 நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறவுள்ள இந்தச் சோதனைத் திட்டத்தில், இ-பாஸ்போர்ட் வைத்திருக்கும் தகுதியான இந்தியக் குடிமக்கள் பங்கேற்கலாம். முதற்கட்டமாக ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் குறிப்பிட்ட சர்வதேச விமானங்களில் பயணிப்போருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலைய முனையங்களில் இவ்வசதி வழங்கப்படுகிறது. டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை, சென்னை, அமிர்தசரஸ் ஆகிய 7 விமான நிலையங்களில் இந்த முன்னோட்டச் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கான தொழில்நுட்ப வசதிகளும் தேவையான உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முனைய நுழைவுப் பகுதிகள் மற்றும் பாதுகாப்புச் சோதனை மையங்களில் பயணிகள் டிஜி யாத்ரா வசதியைப் பயன்படுத்த முடியும். இந்தச் சோதனையின்போது பயணிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டு, 2027ஆம் ஆண்டில் இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், டிஜி யாத்ரா வசதி வழக்கமான விமானப் பயண நடைமுறைகளுக்கு மாற்றாக இருக்காது. பயணிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கும் கூடுதல் வசதியாக மட்டுமே செயல்படும். எனவே, சர்வதேசப் பயணிகள் தங்களது அசல் பயண ஆவணங்களைத் தவறாமல் வைத்திருக்க வேண்டும். விமான நிறுவனங்களின் ஆவணச் சரிபார்ப்பு மற்றும் குடிவரவு தொடர்பான நடைமுறைகளையும் வழக்கம்போல் நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் டிஜி யாத்ராவின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இத்தளத்தில் 2.65 கோடிக்கும் அதிகமானோர் பயனர்களாக உள்ளனர். மேலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் 39 விமான நிலையங்கள் வாயிலாக இதுவரை 11 கோடிக்கும் அதிகமான பயணங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, 2027ஆம் ஆண்டுக்குள் மேலும் 25 உள்நாட்டு விமான நிலையங்களில் டிஜி யாத்ரா வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.