விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைத் தேடும் பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், நான்காவது நாளாகத் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு, பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி (7). இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி இரவு, ஹேமாவதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும், சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை எழுந்த பெற்றோர், அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்களுடன் இணைந்து அக்கம்பக்கப் பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் செஞ்சி டிஎஸ்பி ரமேஷ்ராஜ் ஆகியோர் விசாரணையை முடுக்கிவிட்டனர். சிறுமியை மீட்பதற்காக இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில், நான்கு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, சந்தேகத்தின் பேரில் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியைத் தேடும் பணி நான்காவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழுப்புரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் ஆலம்பூண்டி மற்றும் அருகிலுள்ள திக்காமேடு, ரெட்டிபாளையம், நடுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர். அங்குள்ள விவசாய நிலங்கள், கிணறுகள், குட்டைகள் மற்றும் மலைப்பகுதிகளிலும் விரிவான தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சிறுமி மாயமானது தொடர்பான தடயங்களைக் கண்டறிய, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் மொபைல் போன் கோபுரத் தரவுகளைத் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் விசாரணையும் தேடுதல் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.