வயது ஒரு தடையல்ல என்பதை தனது சாதனையின் மூலம் நிரூபித்துள்ளார் கனடாவைச் சேர்ந்த 61 வயது டோனாஜீன் வைல்ட். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப் போட்டிகளில், தொடர்ந்து 5 மணி நேரம் பிளாங்க் நிலையில் இருந்து புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான டோனாஜீன் வைல்ட், இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் பிளாங்க் நிலையில் இருந்து கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்து, தொடர்ந்து ஐந்து மணி நேரம் பிளாங்க் நிலையில் நீடித்து புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு தனது 12 பேரக்குழந்தைகளும் நேரில் வந்து அளித்த ஊக்கமே முக்கியக் காரணம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாகத் தீராத வலியால் அவதிப்பட்டு வந்தபோதிலும், விடாமுயற்சியுடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 61 வயதிலும் தனது உடல் வலிமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்திய டோனாஜீன் வைல்டின் சாதனை, விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.