6-ம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

6-ம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

6-ம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வியாண்டுக்கு பதிலாக அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 1-ம் தேதி முதல் 3 மொழிகளை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று கடந்த மே 15-ம் தேதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 3 மொழிகளில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கி சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதே நேரத்தில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழிக்கான பொதுத்தேர்வு நடத்தப்படாது என்றும் கூறப்பட்டது. இந்த மும்மொழிக் கொள்கையை எதிர்த்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிமன்றம், மத்திய அரசு, சி.பி.எஸ்.இ. மற்றும் என்.சி.இ.ஆர்.டி. ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது, நீதிபதி ஜோய்மால்யா பக்சி, குழந்தைகளின் வசதியை கருத்தில் கொண்டு 6-ம் வகுப்புக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு வரை ஒத்திவைப்பது குறித்து சி.பி.எஸ்.இ. பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார். அதேவேளையில், நடப்பு கல்வியாண்டிலேயே 3 மொழிகளை கற்க விரும்பும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கலாம் என்றும் கூறினார். இதற்கு சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா, நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை பரிசீலித்து புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இரு தரப்பினரின் உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தங்களது ஆலோசனைகளை தெரிவித்துள்ளதாகவும், வழக்கில் எழும் உண்மையான பிரச்சினைகள் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினர்.