6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் தகவல்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

06 Sep 2026 www.thinathulir.com

6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் தகவல்

6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளை, செப்டம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை உள் தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 7.6 கிலோமீட்டர் உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரையிலான பகுதிகளில், ராயலசீமா மற்றும் தமிழகத்தின் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மழைக்கு வாய்ப்பு செப்டம்பர் 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. இதுதவிர, தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த நாட்களில் எப்படி இருக்கும்? செப்டம்பர் 7 மற்றும் 8: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 9 மற்றும் 10: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் 11: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை நிலவரம் செப்டம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உள் தமிழகத்தில் வெப்பநிலை சற்று உயரக்கூடும். இந்த காலகட்டத்தில் உள் தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னையின் வானிலை செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை இல்லை செப்டம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.