அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எஸ். ரவி ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தது. மேலும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.