தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பரிசாக ஏராளமான புத்தகங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அவற்றில் 5,000 புத்தகங்களை அவர் சிறைச்சாலை மற்றும் பொது நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அதன்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் வாசிப்பின் மூலம் நல்ல மாற்றத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில் 3,000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களை நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஒப்படைத்தார்.மேலும், தாம்பரத்தில் புதிதாக செயல்படத் தொடங்கியுள்ள குளக்கரை நூலகத்திற்காக 2,000 புத்தகங்கள் தி.மு.க. நிர்வாகி எஸ்.ஆர். ராஜாவிடம் வழங்கப்பட்டன.2018-ஆம் ஆண்டு தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, தம்மைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகள் அல்லது சால்வைகள் வழங்குவதற்குப் பதிலாக புத்தகங்களை மட்டுமே அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.அந்த வேண்டுகோளின் அடிப்படையில், இதுவரை தொண்டர்கள் வழங்கிய சுமார் 6 லட்சம் புத்தகங்கள் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வாசிப்பு பழக்கம் அதிகரித்தால்தான் தமிழ்நாடு தனது தனித்துவமான அடையாளத்தை பாதுகாத்து நிற்கும் என்றும், புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்பகங்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தால் உடனடியாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.