செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் பெருமளவில் முதலீடு செய்து வரும் கூகுள் நிறுவனம், தனது செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 5 நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பணியில் இருந்து விலக விரும்புவோருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு இதேபோன்ற சலுகையை அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏஐ துறையில் முதலீடுகளைத் தொடர்ந்து அதிகரித்து வரும் கூகுள், அதே நேரத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினங்களையும் சீரமைக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் விரிவாக்கப்பட்ட இத்திட்டம் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பொருந்தும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இதுவரை எத்தனை பேர் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்ற தகவலை கூகுள் வெளியிடவில்லை. கடந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சில பணிக்குழுக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம், பின்னர் படிப்படியாகப் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், கூகுளின் அனைத்து துறைகளிலும் இந்த விருப்ப ஓய்வு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சிப் பிரிவான டீப்மைண்ட் மற்றும் கூகுள் கிளவுட் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தத் துறைகளில் தற்போதுள்ள பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதுடன், தேவைக்கேற்ப புதிய ஊழியர்களையும் பணியமர்த்த கூகுள் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் இந்தத் திட்டத்தின் விளைவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. அந்நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் விருப்ப ஓய்வு சலுகை வழங்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சிலர் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுவனத்தில் இருந்து வெளியேறத் தொடங்கியதாக இந்த விவகாரத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.