தமிழக அரசுத் துறைகளில் ஒரே பணியிடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களைக் கணக்கெடுத்து, அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை சார்பில் அனைத்துத் துறைச் செயலர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அவசரச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாகவோ பணியாற்றி வருகிறார்களா என்பது குறித்த முழுமையான விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை வரும் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதவி உயர்வு காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் மீண்டும் பழைய பணியிடத்துக்கே திரும்பிய ஊழியர்களின் விவரங்களையும் அறிக்கையில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது பழைய இடத்துக்குத் திரும்பினர், அதற்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட தகவல்களையும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்குப் பிறகும் பழைய இடத்திலேயே தொடர்வோர் மீது கவனம் அரசு விதிகளின்படி, ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும்போது வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறையாகும். இருப்பினும், சிலர் புதிய இடத்துக்குச் சென்ற சில நாட்களிலேயே நிர்வாகக் காரணங்களைக் குறிப்பிட்டோ அல்லது தற்காலிகப் பணியிட மாற்றம் பெற்றோ மீண்டும் தங்களது பழைய பணியிடத்துக்குத் திரும்புவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வழிகளில் பழைய இடத்திலேயே தொடர்ந்து பணியாற்றுபவர்களையும் கணக்கெடுப்பில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கணக்குப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் ஒரே ஊழியர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றும்போது நிர்வாக ரீதியாகப் பல்வேறு சிக்கல்கள் உருவாகக்கூடும் என அரசு கருதுகிறது. நீண்டகாலம் ஒரே இடத்தில் பணியாற்றுவதால் நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதுடன், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நெருக்கமான தொடர்புகள் உருவாகி முறைகேடுகள், ஊழல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஊழியர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களைப் பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தவெக அரசு முடிவு செய்துள்ளது.