ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகின்றனர். பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்திய தடகள ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகள் பழமையான தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார். 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிச்சுற்றில் பி.டி. உஷா 55.42 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்திருந்தார். அந்த நேரமே 42 ஆண்டுகளாக தேசிய சாதனையாக நீடித்து வந்தது. இந்நிலையில், வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி, பி.டி. உஷாவின் சாதனையை 0.67 விநாடிகள் முன்னதாக முறியடித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா, பி.டி. உஷாவின் 55.42 விநாடிகள் சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது அதைவிட சிறப்பாக செயல்பட்டு புதிய தேசிய சாதனையை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இதனிடையே, ஆண்களுக்கான 90 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் கபில் போகாரியா, தென் கொரிய வீரரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.