நடிகை நஸ்ரியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் விருப்பம் என்றும், மூன்று முறை கேட்டும் அவர் நடிக்க மறுத்த நிலையில், நான்காவது முயற்சியில்தான் சம்மதம் தெரிவித்தார் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சீன்'. திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சூர்யா வித்தியாசமான காவல் அதிகாரியாக நடித்துள்ளார். நஸ்லென் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழ் திரைப்படத்தில் நடிப்பதால், 'சீன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சூர்யா, நஸ்ரியாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் குறித்து மனம் திறந்தார். அவர் பேசுகையில், நஸ்ரியாவுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை தனக்கு நீண்ட காலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். தனது முந்தைய மூன்று படங்களில் நடிப்பதற்காக அவரை அணுகியபோதும், ஒவ்வொரு முறையும் அவர் வாய்ப்பை ஏற்கவில்லை என்றும், நான்காவது முறையாகக் கேட்டபோதுதான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் பட வாய்ப்புகளை நஸ்ரியா நிராகரித்திருக்கக்கூடும் என்று கூறிய சூர்யா, தனக்குப் பொருத்தமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் தெளிவான அணுகுமுறையையும் தன்னம்பிக்கையையும் கொண்டிருப்பதாகப் பாராட்டினார். நஸ்ரியாவின் நடிப்புத் திறமை தனக்குப் பிடித்தமான ஒன்று என்றும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு காட்சியையும் அவர் தயார்படுத்திக்கொள்ளும் விதம் சிறப்பானது என்றும் தெரிவித்தார். 'சீன்' படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நஸ்ரியா சிறப்பாக நடித்துள்ளதாகவும், குறிப்பாக சண்டைக் காட்சிகளுக்காக அவர் மேற்கொண்ட பயிற்சியும் முயற்சிகளும் வியப்பை ஏற்படுத்தியதாகவும் சூர்யா கூறினார். நஸ்ரியா கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'சீன்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகில் கால்பதிக்கிறார். இதற்கிடையே, சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், தற்போது அந்த ஆசை நிறைவேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நஸ்ரியா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.