உலகையே கால்களால் சுற்றிவரும் வியக்கத்தக்க பயணத்தை 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த 57 வயதான பிரிட்டிஷ் சாகசக்காரர் கார்ல் புஷ்பி, இறுதியாக தனது சொந்த ஊரான இங்கிலாந்தின் ஹல் நகருக்குத் திரும்பியுள்ளார். அவரது நீண்டகாலப் பயணம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரான கார்ல் புஷ்பி, 1998-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தனது 29-வது வயதில் தென் அமெரிக்க நாடான சிலியில் இருந்து இந்தச் சாகசப் பயணத்தைத் தொடங்கினார். 'கோலியாத் எக்ஸ்பெடிஷன்' எனப் பெயரிடப்பட்ட இந்தப் பயணத்தில், அவர் தனக்கென இரண்டு கடுமையான நிபந்தனைகளை விதித்துக் கொண்டார். எந்தச் சூழலிலும் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதும், பயணத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் சொந்த நாட்டுக்குத் திரும்பக் கூடாது என்பதுமே அவை. இந்த விதிகளைக் கடைப்பிடித்து நடைபயணம் மற்றும் நீச்சல் மூலமாகவே தனது இலக்கை நோக்கிப் பயணித்தார் கார்ல். தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா முழுவதையும் நடந்தே கடந்த அவர், அலாஸ்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலுள்ள ஆபத்தான பெரிங் நீரிணையையும் கடந்து சாதனை படைத்தார். பனிக்கட்டிகள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்தும், பனிப்பாறைகளுக்கு இடையே நீந்தியும் அவர் பயணத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து சைபீரியா, மங்கோலியா, சீனா, மத்திய ஆசியப் பகுதிகள் வழியாகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைக் கடந்து பிரான்ஸைச் சென்றடைந்தார். அங்கிருந்து பிரிட்டனை அடைவதற்காக கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் கடற்கரையிலிருந்து இங்கிலீஷ் சேனல் கடலை நீந்திக் கடந்தார். தொடர்ந்து நான்கு நாட்கள் நீச்சல் மேற்கொண்டு இங்கிலாந்து கரையை அடைந்த அவர், அங்கிருந்து நடந்தே தனது சொந்த ஊரான ஹல் நகரைச் சென்றடைந்தார். ஆரம்பத்தில் இந்தப் பயணத்தை 12 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிட்டிருந்தார் கார்ல். இருப்பினும், ரஷ்யாவில் ஏற்பட்ட விசா தொடர்பான பிரச்சினைகள், 2008-ம் ஆண்டின் உலகப் பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சர்வதேச எல்லை மூடல்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் அவரது பயணத்தைத் தாமதப்படுத்தின. இதனால் திட்டமிட்ட காலத்தைவிட அதிகமாக 28 ஆண்டுகள் இந்தப் பயணம் நீடித்தது. இறுதியில் 29 நாடுகளைக் கடந்து, சுமார் 50,000 கிலோமீட்டர் தொலைவை எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் பயன்படுத்தாமல் நடந்தும் நீந்தியும் கடந்து தனது இலக்கை எட்டியுள்ளார். நேற்று திங்கட்கிழமை ஹல் நகரை வந்தடைந்த அவருக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்களும் குடும்பத்தினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகம் திரும்பிய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட கார்ல் புஷ்பி, "இறுதியாக வீட்டை வந்தடைந்தது நம்ப முடியாத உணர்வாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகச் சந்திக்காத எனது தாயையும், தற்போது 36 வயதாகும் எனது மகன் ஆடமையும், இதுவரை நேரில் பார்த்திராத 12 வயது பேத்தியையும் சந்தித்தது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சுமார் மூன்று தசாப்த காலம் பல்வேறு சவால்களையும் தடைகளையும் எதிர்கொண்டு தனது இலக்கை அடைந்த கார்ல் புஷ்பியின் இந்தப் பயணம், மனிதனின் மன உறுதி, விடாமுயற்சி மற்றும் உடல் சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவரது சாதனைக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.