இந்தியாவின் விண்வெளித் திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில், 2029-ம் ஆண்டுக்குள் நாட்டில் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் வகையிலான (SSLV) பிரத்யேக விண்வெளி வளாகம் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நாராயணன், இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு, ககன்யான் மற்றும் சந்திரயான் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். 2029-க்குள் 4 ஏவுதளங்கள் உலக அளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவின் ஏவுதல் திறனை மேம்படுத்தவும், வணிக ரீதியிலான விண்வெளிச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2029-ம் ஆண்டுக்குள் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கரில் SSLV வளாகம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான பிரத்யேக வளாகம் உருவாக்கப்பட உள்ளது. இங்கு செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் கட்டிடங்கள், ஏவுதளங்கள், ரயில் பாதை வசதிகள், தொலைஅளவியல் மையங்கள் மற்றும் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. உலகளவில் அதிகரித்து வரும் செயற்கைக்கோள் ஏவுதல் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த வளாகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்துப் பேசிய நாராயணன், இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்பதைத் தெளிவுபடுத்தினார். அதேவேளையில், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டிய தேவை உருவாகி வருவதால், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். விண்வெளித் துறையில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்வதுடன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உயர் தொழில்நுட்பத் துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். சுகன்யான் திட்டத்தில் அடுத்தகட்ட சோதனை இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் நாராயணன் விளக்கினார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இத்திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தச் சோதனையைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக மேலும் இரண்டு ஆளில்லா சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ககன்யான் திட்டத்துக்காக இதுவரை சுமார் 8,000 தரைநிலைச் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்களும் தற்போது சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியைப் பாதுகாப்பாக மேற்கொள்வதற்காக பல்வேறு சோதனைகளும் பயிற்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம் இந்தியாவின் எதிர்கால நிலவு ஆய்வுத் திட்டங்கள் குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர், ஜப்பான் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சந்திரயான்-5 திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில், 350 கிலோ எடையுள்ள ரோவர் நிலவில் தரையிறங்கி, அங்கு 100 நாட்கள் வரை நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து மேற்கொள்ளவுள்ள இந்தத் திட்டம், நிலவு குறித்த ஆராய்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.