சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), 2032 முதல் 2035ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக Cricbuzz வெளியிட்டுள்ள செய்தியில், 2032ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டிகளை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தொடரை நடத்தும் நாடு மற்றும் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இதற்கிடையில், 2032ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா நடத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இதுவரை அந்த நாட்டின் பெயர் உறுதி செய்யப்படவில்லை. இந்த கணிப்பு உண்மையானால், 2028, 2030, 2032 என தொடர்ந்து மூன்று டி20 உலகக்கோப்பை தொடர்களும் SENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் சூழல் உருவாகும். இந்த நாடுகளின் கிரிக்கெட் மைதானங்கள் வேகப்பந்து வீச்சு, பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவை. இதனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். இது டி20 போட்டிகளின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் விசாலமான மைதானங்கள், இங்கிலாந்தின் ஸ்விங் தன்மை கொண்ட ஆடுகளங்கள், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்கள் ஆகியவை வீரர்களுக்கு வெவ்வேறு சவால்களை ஏற்படுத்தும். மேலும், 2032 முதல் 2035 வரையிலான காலகட்டத்தில் ஆறு முக்கிய சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்த ஐசிசி உத்தேசித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2032–2035 காலகட்டத்திற்கான உத்தேச போட்டி அட்டவணை: - 2032: ஆண்கள் டி20 உலகக்கோப்பை – அக்டோபர் / நவம்பர். -2033: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – ஜூன். - 2033: சாம்பியன்ஸ் டிராபி – அக்டோபர். - 2034: ஆண்கள் டி20 உலகக்கோப்பை – ஜூலை. - 2035: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான நாடுகள் மற்றும் மைதானங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஐசிசியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.