2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலிக்கு தற்போது 37 வயதும், ரோகித் சர்மாவுக்கு 39 வயதும் இருப்பதே இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரோகித் சர்மாவும் விராட் கோலியும் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். ரோகித் சர்மா கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களை பதிவு செய்துள்ளதாக நினைக்கிறேன். இருவருமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றார். மேலும், பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள அதிக கால அவகாசம் இல்லை என தான் கருதுவதாகவும் கில் தெரிவித்தார். அடுத்த தொடரில் இருந்தே அனைத்து வீரர்களும் விளையாடும் வகையில் அணியை தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். உலகக் கோப்பையில் எந்த வீரர்கள் மற்றும் எந்தக் கூட்டணியை களமிறக்க விரும்புகிறோமோ, அந்த அணியமைப்பை இப்போதிருந்தே பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்றும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.