தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணைய விதிகளின்படி தங்களது தேர்தல் வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தங்களது தேர்தல் செலவு தொடர்பான கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன. இதில் திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112 கோடியும் செலவு செய்துள்ளதாக கணக்கு விவரங்களில் தெரியவந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, தேர்தலுக்காக தவெக மொத்தம் ரூ.19.8 கோடி செலவிட்டுள்ளது. திமுக செலவிட்ட ரூ.197.84 கோடியுடன் ஒப்பிடும்போது, தவெகவின் தேர்தல் செலவு சுமார் பத்தில் ஒரு பங்காக உள்ளது. தவெக தாக்கல் செய்துள்ள கணக்கு விவரங்களின்படி, விளம்பரங்களுக்காக ரூ.6.34 கோடி செலவிடப்பட்டுள்ளது. விஜய்யின் விமானப் பயணத்துக்கு ரூ.3.54 கோடியும், பிரசாரப் பொருட்களுக்கு ரூ.40.54 லட்சமும் செலவாகியுள்ளது. பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக ரூ.2.06 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பல்வேறு வழிகளில் கட்சிக்கு ரூ.7.02 கோடி வரவு கிடைத்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தவெகவின் தொடக்க கையிருப்பு ரூ.3.03 கோடியாக இருந்ததாகவும் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.