தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், முதல்-அமைச்சர் பேசிய சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் மீண்டும் கடும் அமளி ஏற்பட்டது. திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், தனது சட்டமன்ற அனுபவத்தில் பல முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கண்ணியமாகவே பேசியதாகவும் தெரிவித்தார். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்த நிலையில், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதல்-அமைச்சர் பேசியதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஏற்கனவே சட்டசபையில் பலமுறை விவாதிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்தும் முதல்-அமைச்சர் அவதூறாக பேசியதாகவும், ஆதாரமின்றி கருத்துகளை தெரிவித்ததாகவும் எ.வ.வேலு கூறினார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல்களைத் தவிர்த்து, மிசா மற்றும் மாறன் தொடர்பான குறிப்புகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சர்க்காரியா கமிஷன் வழக்கு தொடர்பாகவே முதல்-அமைச்சர் அவையில் பேசியதாக தெரிவித்தார். கலைஞர் நிதி பெற்றது உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். சர்க்காரியா கமிஷன் சுட்டிக்காட்டிய 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். மிசா தொடர்பான விவகாரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், அனைவரும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என கூற முடியாது என்றார். பிரதமராக இருந்த இந்திரா காந்தி குறித்து அவதூறாக பேசியதன் காரணமாகவே ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாகவும், இந்திரா காந்தியிடம் 21 அம்சத் திட்டம் இருப்பதாக அவர் அவதூறாக பேசியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்கு ஆதாரமோ, குறிப்போ இல்லை என்றும் அவர் கூறினார். இதையடுத்து, முதல்-அமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், முதல்-அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து முழக்கங்களையும் எழுப்பினர்.இதையடுத்து, சபாநாயகர் இருக்கையைச் சுற்றி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் அவைக்காவலர்கள் உள்ளே வந்து, திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.அப்போது, ஒரு உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை அமைதியாக அழைத்துச் செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.நேற்றும் சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா மற்றும் கோஷங்களில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.