174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி

174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு புறப்பட்ட பிளைதுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானத்தில் நடுவானில் பரபரப்பான சம்பவம் நடந்தது. விமானிகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி, கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. கத்திக்குத்து காயம் ஏற்பட்ட நிலையிலும், ஸ்மித் மச்சார் துணிச்சலுடன் செயல்பட்டு விமானி அறையின் கதவை திறந்தார். இதையடுத்து உள்ளே சென்ற பயணிகளும் விமான பணியாளர்களும் துணை விமானியை கட்டுப்படுத்தி, கயிற்றால் கட்டிப்போட்டனர். இதன் மூலம் விமானத்தை தகர்க்கும் முயற்சி தடுக்கப்பட்டு, அதில் இருந்த 174 பயணிகளும் பாதுகாப்பாக உயிர்தப்பினர். இந்த விமானத்தின் கேப்டனான ஸ்மித் மச்சார் இந்தியாவை சேர்ந்தவர். மும்பை கத்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்த அவர், பணிக்காக துபாயில் வசித்து வருகிறார். ஆபத்தான சூழ்நிலையிலும் காயங்களுடன் போராடி பயணிகளின் உயிரை காப்பாற்றிய அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையே, விமானி ஸ்மித் மச்சாரை நினைத்து இந்தியாவே பெருமைப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பல உயிர்களை காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையிலும் 100-க்கும் மேற்பட்டோரை அவர் காப்பாற்றியதாகவும், ஸ்மித்தை நினைத்து இந்தியா பெருமைப்படுவதாகவும், அவருக்கு அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, விமானத்தில் கத்தியால் தாக்கப்பட்ட ஸ்மித் மச்சார், சவுதி அரேபியாவின் தபுக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்பான முழுமையான தகவல்களை பெற முயற்சி மேற்கொண்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.