திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயது தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி, நேற்று (புதன்கிழமை) இரவு அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அம்மிக்கல் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள விஷ்ணு (26) என்பவர் சிறுமியின் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் அழுதபடி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். போலீசார் தன்னைத் தேடி வருவதை அறிந்த விஷ்ணு, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரை சுற்றிவளைத்த போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், விஷ்ணுவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.