வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே 10ம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், முதல்-அமைச்சர் விஜய் மதுராந்தகம் வருவதையொட்டி, சம்பவத்தை பொய்யான தகவல் எனக் கூறி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட முதல்-அமைச்சரின் வருகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதையே காவல்துறை முக்கியமாகக் கருதுகிறதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். “இது உண்மையில் யாருக்கான ஆட்சி? அந்தச் சிறுமிக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.