தமிழ்நாட்டில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் இருந்த சனிக்கிழமை கட்டாயப் பணி முறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி இந்த அலுவலகங்கள் வார நாட்களில் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகையில்லா ஆவணப் பதிவு சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சார்பதிவாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இனி கட்டாயப் பணி இருக்காது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நடைமுறை கைவிடப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, வணிக வரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்படுவதால் சார்பதிவாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் சனிக்கிழமை கட்டாயப் பணி முறை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பதிவுத்துறை தற்போது "எங்கிருந்தும் பதிவு" என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு பணிகளுடன் கூடுதலாக பல்வேறு நிர்வாகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சனிக்கிழமைகளிலும் தொடர்ந்து ஆவணப் பதிவு நடைபெறுவதால், அலுவலகத்தின் பிற பணிகளில் தாமதம் ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் அனைத்து ஆவணங்களையும் வருகையில்லா பதிவு மற்றும் காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் வகையில் சேவைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதிவுத்துறை சேவைகளின் தரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் அமலில் இருந்த சனிக்கிழமை கட்டாயப் பணி முறை தற்போது கைவிடப்பட்டுள்ளது.