10 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்-டாப் வழங்கப்படும் - அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
27 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

10 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்-டாப் வழங்கப்படும் - அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

10 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்-டாப் வழங்கப்படும் - அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பாக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் உயர்கல்வித்துறை தயாராக இருப்பதாக அவர் கூறினார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் ஆனந்த்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எம்.பி.க்கள் ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து, 15 மாணவர்களுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். அப்போது பேசிய அவர், தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். தனக்கு ஏற்கெனவே வீட்டுக் கடன் இருந்ததைக் காரணம் காட்டி கல்விக் கடன் வழங்க மறுத்ததாகவும், இதனால் தனது பிள்ளையைச் சிரமப்பட்டே படிக்க வைக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க உயர்கல்வித்துறை தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். 2 ஆண்டுகளுக்குள் 9,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது: கடந்த காலங்களில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வந்தன. தற்போது அத்தகைய சூழல் இல்லை. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் காரணமாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணக் கொள்கையை அரசு விரைவில் நடைமுறைப்படுத்தும். அரசு கல்லூரிகளில் 2,700 பேராசிரியர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கப்படுவார்கள். மேலும், எஞ்சியுள்ள 9,000 காலிப் பணியிடங்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும். தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றது குறித்து கருத்து 59 ஆண்டுகளுக்குப் பிறகு, பல தலைவர்களின் போராட்டங்கள் மற்றும் நீண்டகாலக் காத்திருப்புக்குப் பலனாக, முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.