சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே 10-ம் வகுப்பு மாணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படும் விசைத்தறி தொழிலாளி, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பிள்ளை அருகே கோட்டைமேடு பகுதியை சேர்ந்த நாகராஜ், விஜயலட்சுமி தம்பதியின் மகன் தவுசிக் (15). இவர் கே.ஆர்.தோப்பூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு இடங்கணசாலை அருகே சிட்டனூரை சேர்ந்த வடிவேலின் மகனான சிவராஜ் (24) என்பவருடன் நட்பு இருந்துள்ளது. சிவராஜ் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டில் இருந்த தவுசிக்கை, சிவராஜ் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் இருவரது பெற்றோரும் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே, கே.ஆர்.தோப்பூர் சாலையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் இரும்பாலைக்கு சொந்தமான இடத்தில் தவுசிக் கழுத்தை நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு சென்ற அவரது பெற்றோர், மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், சிவராஜ் தான் தவுசிக்கை கொலை செய்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிவராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தாரமங்கலம் அருகே பெரியபட்டி சுடுகாடு பகுதியில் உள்ள மரத்தில் சிவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் கொலை வழக்கும், தாரமங்கலம் போலீசார் தற்கொலை வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தவுசிக் மற்றும் சிவராஜ் இருவரும் நண்பர்களாக பழகி வந்ததும், சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக பேசாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அப்போது ஆத்திரமடைந்த சிவராஜ் தவுசிக்கை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பின்னர் ஏற்பட்ட பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இருவரும் செல்போனில் பிரிபயர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அடிக்கடி விளையாடி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குடிபோதையில் நடந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.